
சிறிய வயதில் கடற்கரைக்கு செல்லும் பொழுது கரையில் குடு குடு வென்று வரிசைகட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் கருப்பு நிற ஆமைக்குட்டிகளைக்களைக்கண்டால் மனம் குதூகலமாகி விடும்.
உள்ளங்கைக்குள் அடங்கி விடும் சிறிய ஆமைக்குட்டிகளை கையால் தொட்டு பிடித்து விளையாட பயமாக இருக்கும்.இருப்பினும் ஒரு நாள் கூட வந்த சகாவிடம் பிடிக்க சொல்லி ஒரு பையில் போட்டு வீட்டிற்கு எடுத்து வந்து விட்டேன்.
எல்லோரும் கோழி வளர்க்கின்றார்கள்,குருவி வளர்கின்றார்கள்,முயல் வளர்கின்றார்கள்.நாம் வித்தியாசமாக ஆமை வளர்த்தால் என்ன என்ற ஒரு ஆர்வத்தில் குட்டித் தம்பிக்கு வாங்கிய இன்ஸ்டண்ட் மில்க் பவுடர் காலி டப்பாவை ஆமைக்கு வீடாக்கி அதனுள் பத்திரப்படுத்தி விட்டேன்.
இதனைக்கண்ட எங்கள் வீட்டிற்கு வரும் பாட்டி முறை வரும் ஒருவர்”ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள்.நீ ஆமையை வீட்டிற்கு கொண்டு வந்து இருக்காயே”அம்மாவின் காதில் விழுமாறு சப்தமாக கூறுவதைப்பார்த்து பாட்டியை எரித்து விடுவதைப்போல் ஒரு பார்வை பார்த்து விட்டு ஆமை வீட்டை பாட்டியின் கண்களில் படாமல் ஒரு ஓரமாக வைத்து விட்டேன்.
என்ன உணவு கொடுப்பது என்று தெரியவில்லை.அரிசி,கம்பு போன்றவற்றை போட்டாலும் ஆமை சாப்பிடுவதாக தெரியவில்லை.
மறுநாள் ஆமையை தகர டப்பாவுடன் காணவில்லை.வீட்டிற்கு வந்த தோட்டக்கார அம்மாவிடம் கொடுத்து கடற்கரையில் விட்டு விடும்படி அம்மா கொடுத்தனுப்பி விட்டார்கள்.அத்தோடு ஆமை வளர்க்கும் ஆசைக்கு சமாதி கட்டியாகி விட்டது.
நான் சிறிய வயதில் வளர்க்க ஆசைப்பட்ட ஆமையைப்பற்றி இந்த இடுகையில் பார்ப்போம்.
ஆமை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய முட்டை இட்டு குஞ்சு பொரிக்கவல்ல ஊர்வன இனத்தைச்சார்ந்த ஒரு சாது விலங்காகும்.தனிமையை விரும்பும் உயிரினமாகும்.
உலகில் 300 வகையான ஆமை இனங்கள் உள்ளன.பெண் ஆமைகளுக்கு சிறிய அளவில் வாலும் ஆண் ஆமைக்கு பெரிய வால்களும் கொண்டிருக்கும்.
விதைகள், இலைகள் கொண்ட பச்சைக் காய்கறிகள், மற்றும் சில பழங்கள் ,புற்பூண்டுகள் இலைதழைகள்,சிலவகைபூக்கள்,சிறியவகை பூச்சிவகைகளை உணவாக உட்கொள்கிறது.
கடலில் வாழும் பெண் ஆமைகள், கருத்தரித்ததும், கடற்கரையை நோக்கி கூட்டமாக பயணிக்கத் துவங்கும். கரையை அடைந்ததும் மண்ணில் பள்ளம் பறித்து முட்டைகளை இட்டுவிட்டு மணலால் மூடி வைத்துவிட்டு சென்றுவிடும். 90 முதல் 120 நாட்கள் வரைஇயற்கை வெப்பத்தால் முட்டைகளில் இருந்து குஞ்சுபொரிந்து வெளிப்படும்.
2 முதல் 200 முட்டைகளைக்கூட ஒரே சமயத்தில் கூட இடக்கூடிய வல்லமை படைத்தது ஆமையினம்.30 கிராம் முதல் 50 கிராம் வரை எடையுள்ள முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவருகின்றன.
உயிரினங்களில் ஆமைகளுக்கு நீண்ட ஆயுள் உள்ளது. அதன் இதயம் மிகவும் நிதானமாகத் துடிப்பதே அதன் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக அமைகிறது.சில ஆமைகள் 150 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. இதன் காரணமாக, சீனக் கலாசாரங்களில் இவை நீண்ட ஆயுளின் சின்னமாக விளங்குகின்றன.லெதர்பேக் (leatherback) என்ற கடல் ஆமை தான் மிகவும் நீண்ட வாழ்நாள் கொண்டது, அது 550 கிலோ எடை வரை வளரும் தன்மைக்கொண்டது.
ஆமை தரையில் நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டர்.அதனால்தான் குறைந்த வேக நடையை ஆமை நடை என்று கேலி செய்கின்றனர்.
மனிதர்களுக்கெல்லாம் இனப்பெருக்கம் முடிந்து ஓய்ந்து போகும் வயதில் தான் ஆமைக்கு இனப்பெருக்கமே ஆரம்பிகின்றது.ஆம்,45 வயதில்தான் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக மாறுகிறது. அதாவது, சராசரியாக 45 வயதில்தான் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பக்குவத்திற்கு வருகின்றன. அதற்கு பிறகுதான் முட்டையிட ஆரம்பிக்கின்றன.
தமிழ்நாட்டைப்பொறுத்தவரை நாகை மாவட்டம் கோடியக்கரை, பழையாறு, நாகை, விழுந்தமாவடி, தரங்கம்பாடி, பகுதிகளில், முட்டையிடுவதற்குத் தகுந்த தட்ப வெப்ப சூழல் மற்றும் அடர்ந்த மரங்கள் இருப்பதால், இப்பகுதிகளில் முட்டையிட, ஆமைகள் அதிகளவில் வருகின்றன.
உலகம் முழுதும் மே 23 ஆம் தேதி ஆமைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரிய வகை உயிரினமான ஆமை இனங்கள் அழியும் நிலையில் செல்வதால் ஆமை இனத்தை காக்க வேண்டியது சமுதாயத்தின் அரசாங்கத்தின் கடமையாகும்.
டிஸ்கி:
ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள்.இது எனக்கு நெடு நாள் புரியவில்லை.பாவம் அப்பாவி பிராணி வீட்டினுள் நுழைந்தால் என்ன கேடு என்று நினைப்பேன்.பிறகுதான் அறிந்து கொண்டேன்.ஆமை என்று அப்பாவி உயிரினமான ஆமையைக்குறிப்பிடவில்லை என்று.
ஒரு வீட்டில் இல்லாமை,பொறாமை,முயலாமை,கல்லாமை,உண்மை பேசாமை,முதியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை,சிக்கனம் கொள்ளாமை,சீர்திருத்தம் இல்லாமை ,நிதானம் இல்லாமை ,பெரியோர் சொல் கேளாமைபோன்ற ஆமைகள் புகுந்து விட்டால் அந்த வீடு உறுப்படாது.சரிதானே?
ஆமை முயல் கதையை சிறியவயதில் படித்திருப்போம்.வேகமும் உறுதியும் உடையவர்களிடம் பொறுமையும், ஈடுபாடும் உள்ளவர்கள் தோற்றுவிடுவார்கள் என்ற கருத்துக்காக கூறுப்பட்ட கதையது.
கவிஞர் கண்ணதாசன் உள்ளத்தை ஆமையுடன் ஒப்பீடு செய்கிறார்.அதனையும் கொஞ்சம் கேட்டு ரசியுங்கள்.
அப்புறம் ஒன்று வழக்கம் போல் வரும் டவுட்டு.பருப்பு போட்டு செய்யும் வடையை ஆமை வடை என்கிறார்கள்.நான் சிறிய வயதில் ஆமைக்கு வடைபோட்டு பார்த்தேன் சாப்பிடவே இல்லை.வடையின் ஷேப்பும் ஆமை போல் இல்லை. கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் ஏன் ஆமை வடை என்று பெயர் வந்தது என்று புரிய வில்லை?புரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
| Tweet | |||||
